gitanjali
&
thou hast made me endless, such is thy pleasure .
this frail vessel thou emptiest again and again,
and fillest it ever with fresh life.
this little flute of a reed thou hast carried over hills and dales,
and hast breathed through it melodies eternally new.
at the immortal touch of thy hands
my little heart loses its limits in joy
and gives birth to utterance ineffable.
thy infinite gifts come to me
only on these very small hands of mine.
ages pass,and still thou pourest,
and still there is room to fill.
---rabindranath tagore.
[gitanjali- 1 ]
கீதாஞ்சலி --1
தமிழாக்கம் ---சந்திர கலாதர்
&
என் பிறவிகள் எண்ணற்றவையாக நீ தீர்மானித்து விட்டாய்--
அதுவே உனக்கு மகிழ்வைத் தருகிறதோ ?
இந்த என் நலிந்த உடல் கலயத்தை விடாது கவிழ்க்கிறாய் ;
புத்துயிரால் என்றும் நிறைக்கிறாய் !
நானோ நாணலில் பிறந்த சிறு புல்லாங்குழல்-
இதைச் சுமந்து மலைகள் மடுக்கள் என எங்கும் அலைகிறாய்-
காலம் வெல்லும் புதிய இன்னிசைகளை இதனில் இசைக்கிறாய் !
எனது சிறு இதயம் உனது கரங்களின் முடிவிலா வருடல்களில் மகிழ்ச்சி மீறுகிறது -
வார்த்தை கடந்த பிதற்றல்களை ஜனிக்கிறது !
உனது அன்பளிப்புகளோ எண்ணிலா !
என் உள்ளங்கைகளோ சின்னஞ் சிறியவை !
அவற்றிலேதான் ஏற்கமுடிகிறது !
யுகங்கள் உருள்கின்றன ;
இருப்பினும் பரிசு மழை நிற்கவில்லை !
எனது அறையும் நிறைந்தபாடில்லை !
--------------------------------------------------------------
என் எண்ணங்கள்
---------------------------------------------
இறைவா , நீ ஜனனமும் மரணமும் எனக்கு என்று தீர்மானித்த பின் நான் என்ன செய்யக்கூடும் ?
மேலும் அதுவே உனக்கு மகிழ்வான திருவிளையாடல் எனக் காண்கிறேன் -
உன்னிடம் இதற்குமேல் பிறவா அல்லது இறவா வரம் எப்படி இரந்து கேட்பேன் ?
ஒவ்வொரு முறையும் என்னுள் நீ புத்துயிர் அல்லவா புகுத்துகிறாய் ;
அதுவே நிறைவானது !
எனது உடலோ அற்பமானது -
எனினும் அக்கறையோடு இதனை உன் திருவிளையாட்டில் இணைத்துக் கொள்கிறாய் -
நான் பேறு பெற்றவன் அல்லவா !
எதுவும் என்னால் இல்லை -
புல்லாங்குழல் அதன் இசைக்கு உரிமை எப்படிக் கொண்டாட முடியும் ?
நீ அல்லவா ,உன் கருணை அல்லவா எனக்குள் இசையைத் தோற்றுவிக்கிறது?
உன் உயிர்க்காற்றல்லவா என்னுள் நாதம் காண்கிறது ?
அதுவும் எப்படிப்பட்ட இசை ?
எல்லாமே புத்தம் புதியவை!
ஜீவ ஒளி மிளிர்பவை !
நாணலாகவே நதியோரம் சிற்றலைகளால் அலைக்கழிக்கப்பட்டவனை ,அழிந்துபோகக் கடவனை, நீ அல்லவா கருணைகொண்டு இசைக் குழலாக்கி உன் கிடைத்தற்கரிய அதரங்களில் இழைத்து ,மலைகள் மடுக்கள் எங்கெங்கெல்லாம் நீ அலைகிறாயோ அங்கெங்கெல்லாம்
மறவாது எனையும் உன்னோடு தாங்கிச் செல்கிறாய் !
உன் உயிர்ப்பில் நான் நாதமாய் உயிர்பெற்று உலகையே மகிழ்விக்கையில் --
ஓ! இப்பேறு எவர் பெறுவார் ?
உன் கடைக்கண் பார்வையேகூட மிக அரிது அரிது -
எத்தனை ஜீவன்கள் உன் அருட் பார்வை ஓர் அணுவேனும் எட்டாதோ தம்மை என்று யுகங்களாய் ஏங்கி நிற்கின்றன ?
அப்படிப்பட்ட நிலையில் ,புல்லன் நான்; அற்ப நாணல்--கற்றவன் அல்லேன் ;
துதி பாடும் பக்தனோ ,பாவலனோ அல்லேன் -
நீயோ இந்த எளியவனை என்றும் எப்பொழுதும் அன்பாக வருடுகிறாய் -
இயல்புதானே ..அற்பனுக்கு ஒரு பெருவாழ்வு வரின் !
என் இதயம் எல்லை மீறி உல்லாசக் கூத்தாடுகிறது -
வார்த்தை வடிவற்ற உளறல்களில் தன்னையே இழக்கிறது !
பார்..என் கைகள் மிக மிகச் சிறியவை !
இதனில் எவ்வளவு கொள்ளும் ?
நீ ஏன் பெரிய கைகளை எனக்கு அருளாமல் போனாய் ?
உன் பரிசு மழை எல்லையற்றவை !
அவற்றையெல்லாம் அள்ளிக் குவிக்க என் இரு சிறு கைகள் போதாது தவிப்பது நீ காண்கிலையோ ?
ஒரு நாளா ?இரு நாட்களா ? யுகங்களாய் என்னை உன் பரிசுக்களில் வர்ஷிக்கிறாய் !
அது என்றும் நிற்கவும் போவதில்லை !
என் பேராசையைப் பார் !
பிரளயமாய் நீ என்னைப் பரிசுப்பிரவாகங்களில் மூழ்கடித்தாலும்
இன்னமும் என் ஒரு அரைஅறை கூட நிரம்பாத நிலையல்லவா காண்கிறேன் !
இதற்காக என் வீடு மட்டுமல்ல ..நான் வான் விண்ணகங்கள் எல்லாவற்றையும் அல்லவா
அரசியல்வாதிகள் போல வளைத்துப் போட்டிருக்கிறேன் !
கொடுக்கும் உன் கரங்கள் வலித்தாலும் வலிக்கலாம் ;
அள்ளும் என் ஆசையோ கரங்களோ வலி என்றும் காணாது !
எனக்கு அள்ளவே தெரியும்..எனக்குக் கொடுக்கவே தெரியாது என்பது தெரியுமா ?
பேராசை என வரின் எவ்வளவு இடங்களும் போதாது போகும் அன்றோ ?
--சந்திர கலாதர்