என் உரையாய் ---
விடுமுறைக்குப் பின் பணியகம் செல்லச் செயல் படுகிறான் ..மூட்டை முடிச்சுகள் தயாராகின்றன...கண்ணீருடன் உற்றார் விடை தர அவன் நாலு வயதுச் சிறு மகள் விடை தராது ,
'நான் உன்னைப் போக விடமாட்டேன் !'
என்று கூற அவனுள் சிந்தனை கிளர்கிறது .
வலுவிலா மழலையின் வலிமைக் குரல் அவனை அசைத்துப் பார்க்கிறது .
தாகூரின் அற்புதக் கவிதை விரிகிறது .
நம்மை அழ வைக்கிறது .
ஒவ்வொரு பெற்றோரும் ஒவ்வொரு நாளும் இதனை எதிர்கொள்பவர்தானே !
நெடிய கவிதைதான் ...என் தமிழ் செதுக்கம் ஆங்கில மொழிமாற்றத்தில் இருந்து ....
படியுங்கள் ..சொல்லுங்கள் எண்ணங்களை .
அன்புடன் ...சந்திர கலாதர் /25.08.2013 /ஞாயிறு /ஆவணி 9 /பிற்பகல் 3.30 மணி
&
நான் உன்னைப் போகவிட மாட்டேன் !
[ 1 ]
வாயிலில் வண்டி காத்திருக்கிறது .
இப்போது நண்பகல் .
இலையுதிர் காலக் கதிரோன் தன் கடுமை கூட்டியபடியே இருக்கிறான் .
நண்பகல் திடீர் காற்று வெறிச்சோடிய சிற்றூர்ப் பாதையில் புழுதி தூற்றுகிறது
ஆலமரத்தின் குளிர் நிழலில் ஒரு பிச்சைக் கிழவி உடல் அயர்வில்
ஆலமரத்தின் குளிர் நிழலில் ஒரு பிச்சைக் கிழவி உடல் அயர்வில்
தூங்குதற்குத் தன் கந்தைகளை விரித்திருக்கிறாள் .
பேச்சோ ,ஒலியோ ,உயிரின் அசைவுகளோ எங்கும் இல்லாது அது ஒரு இரவில் சூரிய வெள்ளம் புகுந்ததுபோல் இருக்கிறது .
என்னுடைய வீட்டில் மட்டும்தான் ஓய்வோ தூக்கமோ இல்லாதிருக்கிறது .
[ 2.]
' அஷ்வின் 'முடிந்து என் இலையுதிர்கால விடுமுறையும் முடிந்து விடுகிறது ..
மறுபடியும் நான் தொலைதேசப் பணியகம் சென்றாக வேண்டும்
கயிறுகளும் பிரிகளும் கையேந்தி , ஒருவரை ஒருவர் அழைத்தபடி, பல மூட்டைகள் கட்டியபடி வேலையாட்கள் இங்கும் அங்குமாய்ப் பறந்துகொண்டிருக்கிறார்கள்.
துயர் நெஞ்சிற் தாங்கி நீர்த்திரை விழிகளில் இறக்கி , தனித்து அழுவதற்குக்கூட நேரமின்றி இருக்கிறாள் என் மனைவி .
என் எல்லாத் தேவைகளும் நிறைவடைந்திருக்கின்றனவா என்று உறுதி செய்வதில் செயல் முனைப்புடன் இருக்கிறாள் .
என் பொதிகள் எத்தனை பெருத்தாலும் அவளுக்கு நிறைவே இல்லை .
மன அயர்வில் அவளைக் கேட்கிறேன் :--:
'உன் நோக்கம்தான் என்ன ?
இத்தனை ஜாடிகள் ,பானைகள் ,தட்டு கள் , குடுவைகள் ,படுக்கைகள் ,பெட்டி கள் என்று ராஜ உடைமைகள் போன்ற இவற்றை வைத்து நான் என்ன செய்யக் கூடும் ?
சிலவற்றை எடுத்துச் செல்கிறேன் ;மீதியை இங்கேயே விட்டுச் செல்கிறேனே '
[ 3 ]
என் சொல்லைச் சீந்துவார் இல்லை.
' யாருக்குத் தெரியும் ? திடீரென புரியாத தேசத்துல இதெல்லாம் தேவை என்றால் , எங்கே போய்த் தேடுவீர்கள் ?
தங்கமாய்ப் பருப்புகள் ,மிக நேர்த்தியான அரிசி , பாக்கு ,வெற்றிலை அதோ அங்கே ....;
கொஞ்சம் வெல்லக் கட்டிகள் அந்த மூடிய கிண்ணத்தில் .
இங்கே கொஞ்சம் தேங்காய்கள் ,இரண்டு ஜாடியிலே கடுகு எண்ணெய் ,மாம்பழக் கட்டி ,மாங்காய் வற்றல் ,இரண்டு லிட்டர் பால் ,மருந்து பாட்டில்கள்
அங்கே கொஞ்சம் இனிப்புகள் ...
போகிற வழியில் இனிப்புகளைச் சாப்பிட மறக்காதீர்கள் '
காரண காரிய வாதங்கள் எல்லாம் வீண் என்று எனக்குத் தெரியும்
ஒரு மலைபோலவே என் சுமை குவிந்து போனது .
நேரம் பார்க்கிறேன் ;
பேரன்பு உள்ளங்களை எல்லாம் பார்க்கிறேன்
' நான் சென்றாக வேண்டும் ' என்று மெதுவாகச் சொல்கிறேன்
மனையாள் தன் முகம் திருப்புகிறாள் .
தன் தாழ்த்திய விழிகளில் மிரண்டு நிற்கும் கண்ணீர்த் துளிகள் என்னைத் துன்புறுத்தும் என்றெண்ணி , முகத்திரை இறக்கி மறைக்கிறாள் .
[ 4 ]
கதவருகில் என் நாலு வயது மகள் சூழல் மறந்து அமர்ந்திருக்கிறாள்.
பிற நாட்களில் ,இந்நேரம் குளித்து அரை குறையாய்ச் சாப்பிட்டு தூங்கப் போயிருப்பாள்
இன்று அவள் அம்மாவால் அவளைக் கவனிக்க முடியவில்லை .
நேரம் கடந்துவிட்டபோதிலும் குழந்தையைக் குளிப்பாட்டவோ உணவளிக்கவோ இல்லை .
இவ்வளவு நேரம் என் மகள் என் நிழலாய் , கவனமான அமைதியுடன் என் நடவடிக்கை எல்லாம் கண்காணித்து வந்தாள்
இப்பொழுது களைப்புற்று அமைதியாய் கதவருகில் அமர்ந்திருக்கிறாள்
அவள் மனதில் என்ன ஓடுகிறது என்று எவர்க்கும் தெரியாது .
அவளிடம் பேசுகிறேன் :
' என் சின்னம்மா ..போயிட்டு வரேன்ம்மா .'
இறுகிய முகமும் சோக விழிகளும் கொண்டு சொல்கிறாள் :--
' நான் உன்னைப் போக விட மாட்டேன் ! '
வாயிற்படியில் தான் இன்னமும் அமர்ந்திருக்கிறாள் ;
என்னைக் கட்டிப் பிடிக்கவோ , கதவை அடைக்கவோ முயற்சிக்கவில்லை .
பாசத்தின் வலிமை கொண்டுமட்டும் அவள் சொல்கிறாள் --
:
' நான் உன்னைப் போக விட மாட்டேன் ! '
அய்யோ ..செல்லும் நேரம் நெருங்கி விடுகிறது ;
அவளை நீங்கிச் செல்கிறேன் .
[ 5 ]
முட்டாள் பெண்ணே ..யார் நீ ?
' நான் உன்னைப் போக விட மாட்டேன் ..! '
இத்தனை உறுதியோடும் கர்வத்தோடும் இதைச் சொல்வதற்கு
எங்கிருந்து வலிமை பெற்றாய் ?
இப்பாய்ந்து செல்லும் உலகினில் உன் குட்டிக் கரங்களால் எவரைத் தடுத்து நிறுத்த முடியும் ?
உன் வாயிற் கதவருகில் களைப்புற்ற கரங்களுடன் அமர்ந்தபடி
பாசத்தின் வலிமை மட்டுமே கொண்டு உலக சக்திகளுடன் போராடப் போகிறாயா ?
எங்கள் இதயம் துன்பம் நிறைந்து இருப்பினும் எங்களால் நலிந்த நம்பிக்கைமட்டுமே வெளியி ட முடிகிறது :--
' நீங்கள் இருப்பதையே விரும்புகிறோம் !'.
ஆனால் எவரால் உன்போல் துணிவுடன் ,
' நான் உன்னைப் போக விட மாட்டேன் !'
என்று சொல்லக்கூடும்
பச்சிளம் குழந்தையின் இதழ்கள் பாசத்தின் ஆணையைப் பெருமிதமாய்ப் பிறப்பிக்கின்றன
இவ்வுலகம் உன்னைப் பார்த்துச் சிரிக்கிறது ;
என்னை உன்னிலிருந்து இழுத்துச் செல்கிறது .
ஒரு சட்டமிட்ட சோகமான படம்போல் கதவடியில் தோற்ற விழிகளுடன் நீ அமர்ந்திருக்கிறாய் .
உன்னைப் பார்க்கிறேன் ;
கண்ணீர் ததும்பும் விழிகளுடன் அகல்கிறேன் . .
[ 6 ]
என் வழி நான் செல்கிறேன் .
சாலையின் இருமருங்கும் முதிர்கதிர்களுடன் கதிரொளி துய்த்துக் கொண்டிருக்கும் இலையுதிர்கால வயல்கள் காண்கிறேன் .
நாள்முழுதும் தம் நிழல்களையே நெடிது வெறித்தபடி சாலையில் மர வரிசைகள் தனிமைத் துயருற்று நிற்கின்றன . .
இலையுதிர்காலத்து வெள்ளம் கங்கையில் கடல் நோக்கிப் பெருக்கெடுத்து ஓடுகிறது
தாய்ப்பால் அருந்தி உறங்கும் ஈன்றெடுத்த கன்றுகள் போல் மேகத்துணுக்குகள் நீலவானில் படுத்திருக்கின்றன .
யுகங்கள் முதிர்ந்த இவ்வுலகம் தொலைத்தொடுவான் வரை சூரியப் பிழம்பினில் வெற்றுடம்பாய்க் கிடக்கின்றன . .
உலகின் களைத்த நெடுமேனி காண்கிறேன் ;
இதய ஆழத்திலிருந்து நெட்டுயிர்ப்பு விடுக்கிறேன் .
[ 7 ]
வானிலும் பூமியிலும் ஏன் இத்தனை கரிய சோகச் சிந்தனைகள் ! .
எத்தொலைவு சென்றிடினும் ஒரே ஒரு சோர்வூட்டும் புலம்பலே கேட்கிறேன் ;
ஒரே ஒரு துயரப் பல்லவியே செவி மடுக்கிறேன்
' நான் உன்னைப் போக விட மாட்டேன் ..! '
' நான் உன்னைப் போக விட மாட்டேன் ..! '
புவியின் ஒரு விளிம்பிலிருந்து தொலைத்தொடுவான்வரை எங்கும் இந் த முடிவிலா அழுகையின் எதிர் ஒலிப்பே :-
' நான் உன்னைப் போக விட மாட்டேன் ..! '
ஒரு எளிய புல் செண்டுதான்
ஆனாலும் அன்னை பூமியோ அதை நெஞ்சோடு சேர்த்து இறுகத் தழுவிக் கொண்டு அழுகிறது :
' நான் உன்னைப் போக விட மாட்டேன் ...! '
அணையும் விளக்கின் நடுங்கும் சுடர் ;
இருள் அதை விழுங்கும் முன் , ஒரு புலம்பல் சுற்றிப் பரிதவிக்கிறது
' நான் உன்னைப் போக விட மாட்டேன் ..! '
விண்ணின் மண்ணின் எல்லையிலா விரிவுகள் ஊடோடி
பழமையான அழுகை ,ஆழ்ந்த ஓலம் இதுவேதான் :--
' நான் உன்னைப் போக விட மாட்டேன் ..! '
இருப்பினும் எல்லாம் போகின்றன ;
நாம் அவற்றைப் போக அனுமதித்தாக வேண்டும் !
காலஓட்டம் முதல் இதுவே விதி .
படைப்பின் பிரவாகம் அழிவின் கடல் நோக்கியே பாய்கின்றது .
நாம் ஆசைக் கரங்களை எட்ட விரிக்கிறோம்
நம் விழிகள் நம்பிக்கை ஒளிர்க்கின்றன .
நாம் அறைகூவுகிறோம் :--
' நான் உன்னை விட மாட்டேன் ..! '
இருப்பினும் தடையிலா வெள்ளத்தில் எல்லாம் இழுத்துச் செல்லப்படுகின்றன .
சோகப் புலம்பலால் காலக் கரையை வீணே நாம் நிரப்புகிறோம்.
முன் அலை நோக்கிப் பின்அலை அரற்றுகிறது :--
' நான் உன்னைப் போக விட மாட்டேன் ..!'
அழைப்பைக் கேட்பாரோ பொருட்படுத்துவாரோ யாரும் இல்லை .
[ 8 ]
என் சிறு மகளின் வார்த்தைகளில் இப்பிரபஞ்சத்தின் இதயத்திலிருந்து ஊற்றெடுக்கும் சோகப் புலம்பலின் குரல் கேட்கிறேன் . .
நிற்காத ராகங்களில் நியாயமற்ற இதே கோரிக்கை எல்லா முனைகளில் இருந்தும் எழுகிறது
இப்பூமி தான் பெறுவதை எல்லாம் இழக்கிறாள் ;
ஆனால் ,என் நாலுவயது மகள்போல் , தன் பிடி மட்டும் விடாது பாசத்தின் மமதையில் சூளுரைக்கிறாள் :
' நான் உன்னைப் போக விட மாட்டேன்..! '
ஒவ்வொரு நாளும் நொடியும் இப்புவியின் நம்பிக்கைகள் முரட்டுத்தனமாய்
சிதறடிக்கப் படுகின்றன
அவள் முகம் வெளிருகிறது ; விழிகள் கண்ணீரால் மங்குகின்றன ;
இருப்பினும் பாசம் தோல்வி காண்பதில்லை
நெஞ்சு நிமிர்த்தி அடங்காக் குரல் எழுப்புகிறாள் :
' நான் உன்னைப் போக விட மாட்டேன் ..! '
ஒவ்வொரு முறை தோல்வியை எதிர்கொள்ளும்போதும் பூமி சொல்கிறாள் :' நான் நேசிக்கும் அவன் எப்படி எனை நீங்கிப் போகலாம் ?
என் ஆசையை விடவும் வலிமையானதும் எல்லையற்றதும் எது இருக்கக் கூடும் ? '
பாசம் உள்வலிமையின் அகந்தையில் பறைசாற்றுகிறது ;
' நான் உன்னைப் போக விட மாட்டேன் ..! '
ஆனால் அந்தோ ! சோம்பேறிக் காற்றால் இறைக்கப்படும் உலர்தூசுபோல்
கால ஓட்டத்தில் தன் பாசமலர்கள் பற்றிச் செல்லப் படுவது காண்கிறாள்
அவள் கண்கள் குளமாகின்றன ; இதயம் நொறுங்குகிறது ;
பொடிப்பொடியாய் உதிர்கிறாள்
இருப்பினும் மாறாது உரைக்கிறாள் :
' கடவுள் தன் வாய்மை வழுவ மாட்டான் ;
பாசத்திற்கு அழிவிலாத் தலைமை எனும் உறுதி தந்திருக்கிறான் ! '
பாசம் தன் மென்கருணை கொண்டு தைரியமாய் எதிர் கொள்கிறது
தன்னை நசுக்கிவிடும் வல்லமை துணிகிறது
மரணம் எனும் உண்மையைக் கூட மறுக்கிறது .
பாசத்தின் மமதை மொழிகள் மரணத்தைச் சிரிக்கச் செய்கின்றன .
அவள் மரணம் வீழ்கிறாள் ; இருப்பினும் நிரந்தரமாய் வாழ்கிறாள் .
துயர்கொண்ட விழிகளின் கண்ணீர்த் திரை அதிர்வுபோல் , கவலையுடனான அச்சத்துடன் அவள் நடுங்கினாலும் கூட இப்பிரபஞ்சத்தின் அகன்விரிவுகளில் ஊடுருவி இருக்கிறாள்
இதயம் நம்பிக்கை இழப்பினை எதிர்த்துப் போராடுகிறது
இவ்வுலகின் மீது ஒரு துயரப் போர்வை விரிக்கிறது
என்னுள் நோக்கிப் பார்க்கிறேன் :--
இந்த நோவுற்ற ஊமை பூமியை இரு அறிவிலாக் கரங்கள் வீண் தழுவலில் இறுக்கிக் கொண்டிருக்கின்றன
ஒரு நிலையான நிழல் , நகரும் நீர் மீது சிந்தனை விதைக்கின்றது .
அது கண்ணீர் ததும்பும் ஒரு மேகத்தின் நிழலாகுமோ ?
[ 9 ]
மரங்களின் சலசலப்பில் ஏங்கும் ஓர் குரல் கேட்கிறேன்
சருகு இலைகளுடன் நண்பகல் வெங்காற்று அக்கறையற்ற சோம்பேறித் தனத்துடன் விளையாடுகிறது
மெல்லப் பகல் தேய்கிறது ; நிழல்கள் 'அச்வதா ' மரத்தடியில் நீள்கிறது.
அந்த ' எல்லையிலான் 'உலகின் சமவெளி ஊடாய் ஒரு சோக எளிய குழல் ஊதுகிறான்
இவ்வுலகம் அதன் இசை கேட்கிறாள்
இவ்வுலகம் அதன் இசை கேட்கிறாள்
தளர்ந்த கூந்தல் அவள் கழுத்தில் சரிய ,மஞ்சட் சூரியனில் சுடரிடும் தங்க மயமான துண்டினை தன் மார்பகங்கள் மீது விசிறியபடி , ஆற்றோர விரிவயல்வெளியில் அவள் அமர்ந்திருக்கிறாள்
தொலைவில் அவள் பார்வை நிலைகொள்கிறது
மொழியற்ற மௌனத்தில் அவள் குரல் ஊமைப்படுகிறது
அவள் இறுக்கமான சோகம் பூசிய முகம் பார்க்கிறேன்
அது கதவருகில் சிந்தனை வீழ்ந்த என் நாலு வயது மகள் முகம் போல் தோன்றுகிறது.
---ரபீந்தரநாத் தாகூர் .[ அக்டோபர் ,1892 ]
[ ஹுமாயூன் கபீர் அவர்களின் ஆங்கில மொழி மாற்றத்தில் இருந்து தமிழ் வடிவம் --சந்திர கலாதர் ],
&
' I WILL NOT LET YOU GO '
&
&
the carriage waits at the door. it is no midday .
the autumn sun is getting more and more intense .
midday gusts waft the dust across the deserted village path .
an old beggar woman has spread her rags in tired slumber
beneath the cool shade of the banyan tree .
on all sides stretches a sun-flooded night void of speech
or sound or sign of life .
ii
'aswin ' is over and my autumnal holidays are ended .
I must return to my distant place of work again .
busy servants flit about with cords and ropes ,
call one another from room to room and tie up many packs .
my wife with grief-laden heart and tear-dimmed eyes lacks leisure
even to weep alone .
she bustles about to make sure I have all I need .
however much the luggage grows , she is not content .
in despair I ask, ' what do you intend ?
what shall I do with all this wealth of a king's household,
with so many jugs and pots and plates and bottles and beds and boxes ?
let me leave behind some and take some with me .'
iii
no one pays attention to what I say .
' who knows--if suddenly you need them in an alien land
where will you find these things ?
pulses like gold and rice of the finest grain,
areca nuts and betel leaves are there .
some jiggery cakes I have put in that covered dish .
here are some coconuts , there two jugs of mustard oil ,
mango pancakes, mango dried and two seers of milk.
here are bottles full of medicine , and there some sweets .
swear that you won't forget to eat them on the way .'
I knew all argument or reason was in vain .
the luggage piled up like a very mountain .
I looked at the watch and looked at the dear dear face.
slowly I said, ' now I must go .'
she turned her face and pulled her scarf over lowered eyes
to hide her tears lest they do me harm .
iv
my four-year old daughter sat absent-minded by the door .
on other days she would , by now , have bathed
and gone off to sleep with scarce half-finished meal.
today her mother could not attend to her .
though it was late , she was neither bathed nor fed .
so long she had shadowed me and watched in attentive silence all I did .
now , with tired limbs she sat quietly by the door
and none knew what was in her mind .
I spoke to her , ' little mother mine , good bye '.
with sad eyes and solemn face , she said ,
' I WILL NOT LET YOU GO .'
she kept on sitting where she was ,
she did not cling to me nor seek to block the door.
with love's assurance she only said ,
'I WILL NOT LET YOU GO ',
but it was time to go and alas , I went .
v
who art thou ,my foolish girl ?
where didst thou find the strength to say words so bold and proud:
' I WILL NOT LET YOU GO .'
whom wilt thou hold in the fleeting world with thy tiny hands , proud maid ?
wilt thou sit with tired limbs by the homestead door
and fight the forces of the world with the force of love alone ?
our hearts are full of grief and yet all that we can say is expression of a timid hope ,
'we want that you should stay .'
who is there that dares say, ' I WILL NOT LET YOU GO '.
thy infant lips voiced the proud claim of love .
the world laughed at thee and dragged me off .
with defeated eyes thou sat by the door like a sad picture in a frame .
I looked at thee and left with tearful eyes .
vi
I went along my way .
on both sides of the road I saw the autumn fields weighed with corn
and basking in the sun .
the rows of trees stand desolate by the road
and all day long gaze at their own shadow .
the ganges flows to sea in full autumnal flood .
white strips of cloud lie upon the azure sky ,
like the new-born calves sleeping after a feed of mother's milk .
the age-old earth is bare in the bright sunlight and stretches to the far horizon .
I looked at her tired stretch and a deep sigh welled up from my heart.
vii
what sombre sadness broods over earth and sky .
far as I go , I hear one monotonous wail , one melancholy note :
' I WILL NOT LET YOU GO .'
from the earth's rim to the farthest horizon , there echoes the endless cry :
' I WILL NOT LET YOU GO .'
a mere wisp of grass , but mother earth clings to it , hugs it to heart and cries :
'I WILL NOT LET YOU GO .'
a flame flickers in the dying lamp.
before darkness can envelop it , there rings a cry ,
' I WILL NOT LET YOU GO .'
throughout heaven and earth's boundless stretch ,
it is the oldest cry , the deepest wail , ' I WILL NOT LET YOU GO .'
and yet all things go and we must let them go !.
this has been since the flow of time began.
creation's currents sweep to destruction's sea.
we stretch out eager arms , our eyes glow with hope ,we proclaim ,
' I WILL NOT LET YOU GO .'
and yet all are swept by the resistless flood .
in vain we fill the shores of time with sad lament .
the wave behind calls to the forward waves ,
' I WILL NOT LET YOU GO.'
' no one listens to the call and no one heads .
viii
I heard voiced the sad lamenting wail welling from the heart of the universe
in my little daughter's words .
from every side arose the same unreasoning claim in unceasing notes .
the earth ever loses what she gets but will not lose her hold , will ,
like my daughter four years old , declare in the pride of love ,
' I WILL NOT LET YOU GO.'
pale of face and eyes dim with tears every day and hour
her hopes are rudely blown and yet love will not know defeat ,
will still declare in defiant tones, ' I WILL NOT LET YOU GO .'
every time she tastes defeat she says ,
' how can he I love go away from me ?
what's there so strong or boundless as my desire ?'
love declares in pride of inner strength , ' I WILL NOT LET YOU GO .'
but alas ! like dry dust wafted by the idle breeze ,
love sees the beloved borne away by flow of time.
her eyes are washed with tears , with broken heart she crumbles down to earth ,
and still insists , ' god will not break his troth .
he has promised love eternal mastery .'
love with her slender grace boldly faces death ,
stands before his overpowering might and denies the very fact of death .
love's proud words make death laugh ,
but she suffers death and yet forever lives ,permeates the vastness of the universe
even while she trembles in anxious fear like a veil of tears on sad solemn eyes.
the heart keeps fighting against the loss of hope
and spreads a pall of sadness o'er the world .
ilook inward and I see;
two unreasoning arms that hold in vain embrace the dumb and painful earth .
a steady shadow broods over the moving waters .
is it the shadow of a cloud full of tears ?
ix
I hear a voice of yearning in the rattle of trees .
in idle indifference the warm midday wind plays with the dead dry leaves .
slowly the day wanes and the shadows lengthen beneath the ' aswatha ' tree.
the infinite plays a sad rustic pipe across the plains of the world .
the earth listens to the tune .
with loosened hair falling o'er her neck and a golden scarf that gleams
in the yellow sun flung across her breasts , she sits in the vast fields of corn
by the riverside .
her steady eyes gaze at the distance .
her voice is mute with speechless silence .
I look at her sad solemn face and it is the face of my four-year old daughter
as she sat brooding by the door .
--RABINDRANATH TAGORE
October ,1892 [ jete nahi dibo from ' sonar taree '.




